Monday 28 September 2015

பூட்டினை உடைக்கும் ஜாலம்


சித்தர்கள் அருளிய ஜால வித்தைகள் வரிசையில் இன்று பூட்டினை உடைக்கும்ஜாலம் பற்றி பார்ப்போம். 

ஆம்!, பூட்டினை உடைக்கும் ஜாலம்தான். எதற்காக பூட்டை உடைக்க வேண்டும்?, அதற்கான அவசியம் ஏன் வந்தது என்பதெல்லாம் நமக்கு ஆர்வத்தினை தூண்டும் கேள்விகள். போகர்அருளிய இந்த ஜாலவித்தைக்கு "கருடன் குஞ்சு வித்தை" என்று பெயர். 

பூட்டுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு?, பதில் போகர்அருளிய "போகர் 700"  என்ற நூலில் இருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

வாங்கியே மந்திரத்தினாலே மைந்தா மகத்தான
இலை கசக்கி விலாங்காணி தன்னில்
ஓங்கியே பிழிந்திடவே தெறிக்கும் இன்னம்
உரைக்கின்றேன் கருடனிட குஞ்சு பார்த்து
ஓங்கியதன் கால் விலங்கிட்டப் புறம் போனால்
உள்ள பெருங்கருடன் கந்து மூலி கொண்டு 
தாங்கியே எடுத்து வந்த கூட்டில் வைக்கத்
தலை தெறிக்கும் குஞ்செல்லாம் பறந்து போமே

பறந்துபோம் அக்கூண்டை எடுத்து வந்து
பாங்கான தணல் மூட்டிப் பார்த்தாயானால்
சிறந்ததொரு மூலிகைதான் வேகாது நிற்கும்
சிவசிவா எடுத்து அதனைப் பதனம்பண்ணு
கறந்திட்ட பால்போல் வெள்ளையாய்ச் சொன்னேன்
காட்டாதே தலைதெறிக்கும் இன்னம் ஒன்று

குஞ்சுடன் இருக்கும் கருடனுடைய கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து, தாய் கருடன் இல்லாத நேரத்தில் கருடனின் குஞ்சின் காலில் விலங்கிட்டுவிட்டு தூரமாகச் சென்று கவனிக்க வேண்டுமாம். தாய்க் கருடன் கூட்டிற்கு வந்து குஞ்சின் நிலமையை பார்த்துவிட்டு, வெளியே பறந்து சென்று, மூலிகை ஒன்றை எடுத்து வந்து கூட்டில் வைக்குமாம் அப்போது விலங்கானது தெறித்துப் போகுமாம். அப்போது குஞ்சு தாய்க் கருடனுடன் சுதந்திரமாய்ப் பறந்து போய்விடுமாம்.

குஞ்சுகள் பறந்து போனதும் அக்கூட்டை பத்திரமாக எடுத்து வந்து எரிக்கவேண்டும் என்கிறார். அப்படி எரித்தால் அந்த குறிப்பிட்ட மூலிகையைத் தவிர மற்றதெல்லாம் எரிந்து போய்விடுமாம். அப்போது அந்த மூலிகையை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டுமாம். அந்த மூலிகையைப் பயன்படுத்தி எந்த உலோக பூட்டுக்களையும் தகர்க்கலாம் என்றும் மேலும் அந்த மூலிகையை வைத்து பல சித்துக்கள் செய்யலாம் என்றும் சொல்கிறார்.

No comments:

Post a Comment